Published : 31 May 2014 09:48 AM
Last Updated : 31 May 2014 09:48 AM

பிரதமர் இல்லத்தில் குடியேறினார் மோடி: குடும்பம் இன்றி தனிநபராகச் செல்லும் முதல் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வெள்ளிக்கிழமை குடியேறினார். குடும்பம் இன்றி தனிநபராகச் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

இது குறித்து தி இந்துவிடம் அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது, ‘வெள்ளிக்கிழமை காலையில் நடந்த சிறு பூஜைக்கு பின் பிரதமர் தனது புதிய வீட்டில் குடிபுகுந்தார். இந்த பூஜையில் பிரதமருக்கு மிகவும் நெருக்கமான சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.

வீடு மாறுவதற்கான ஏற்பாடுகளை பிரதமருக்கு மிகவும் நெருக்கமான பணியாளரான பத்ரி என்பவர் செய்திருந்தார். இவரது மேற்பார்வையில் தயாராகும் சமையலைத்தான் கடந்த 12 ஆண்டுகளாக மோடி சாப்பிடுகிறாராம்’ என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணியாளர்கள், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு உணவு தயாரிப்பது வழக்கம். இனிமேல் அப்பணியாளர்கள் பத்ரி தலைமையில் பிரதமருக்காக குஜராத்தி வகை உணவுகளை தயாரிப்பார்கள், அவை சுத்த சைவ உணவு வகைகளாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு இருந்த பிரதமர்களில் லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ஹெச்.டி.தேவகவுடா, பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் சைவப் பிரியர்கள் ஆவர்.

ரேஸ்கோர்ஸ் சாலை பங்களா

ரேஸ்கோர்ஸ் சாலையின் 7 ஆம் எண் பங்களா எனப்படும் பிரதமரின் இல்லம் சுமார் 12 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இங்கு ஐந்து பங்களாக்கள் உள்ளன. அதில் 5-ம் எண் பங்களாவை தங்குவதற்கு மோடி பயன்படுத்த இருக்கிறார். இங்கு குடும்பம் இன்றி தனியாகத் தங்க இருக்கும் மோடியுடன் அவரது நெருக்கத்துக்கு உரியவர்களும் குஜராத்தின் முதல்வர் மாளிகையில் இருந்தவர்களுமான தினேஷ் சிங் மற்றும் ஓ.பி.சிங் ஆகியோர் தங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பங்களாவில் மோடியின் முக்கிய பொருள்களாக இருப்பது அவரது எலக்ட்ரானிக் சாதனங் களே. லேப்-டாப்புகள், நவீன மொபைல்கள், ஐபாட் ஆகிய வற்றை மோடி அதிகமாகப் பயன் படுத்தும் வழக்கம் உடையவராம். மற்ற நேரங்களில் டிவி செய்திகளை கவனமாகப் பார்க்கும் பழக்கம் பிரதமர் மோடிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரேஸ்கோர்ஸ் பங்களாவில் சுமார் பத்து ஆண்டுகளாகத் தங்கி இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26-ம் தேதி வீட்டை காலி செய்து மோதிலால் மார்கில் எண் 3-ல் உள்ள புதிய அரசு பங்களாவில் குடியேறினார். அப்போது முதல் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தன. புதிய பிரதமராக பதவி ஏற்ற பின்பும் சாணக்யபுரியில் உள்ள குஜராத் பவனில் மோடி தங்கி இருந்தார். வெள்ளிக்கிழமைதான் அவர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x