

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்லவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஓராண்டில் வெளியுறவு அமைச்சகத்தின் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்றது. அப்போது பேசிய சுஷ்மா ஸ்வராஜ், "பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இஸ்ரேல் செல்லும் இந்தியாவின் முதல் பிரதமர் நரேந்திர மோடியே.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் இஸ்ரேலுடன் நல்லுறவில் இருந்தாலும் எந்த ஒரு இந்தியப் பிரதமரும் அங்கு செல்லவில்லை.
கடந்த 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேல் சென்றார். அதனைத் தொடர்ந்து 2003-ல் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷேரோன் இந்தியா வந்தார். அவரே இந்தியா வந்த முதல் இஸ்ரேலிய பிரதமராவார்.
அவர் எப்போது அங்கு செல்வார் என்ற தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. அநேகமாக அவர் இந்த ஆண்டே இஸ்ரேல் செல்லலாம்.
இந்திய - இஸ்ரேல் நல்லுறவு குறித்து ஆலோசிக்க அடுத்த மாதம் (ஜூலை) இந்திய உயர்மட்டக் குழு ஒன்று இஸ்ரேல் செல்கிறது. அப்போது பிரதமரின் இஸ்ரேல் பயணம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும்.
இந்த ஆண்டின் பிற்பாதியில் நானும் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான், டெஹ்ரான் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன்" என்றார்.
இஸ்ரேல் வரவேற்பு:
இதற்கிடையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்ல திட்டமிடுவதை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது "அண்மைக்காலமாக இந்தியா, இஸ்ரேல் நாடுகளின் உயர்மட்ட குழுவினரின் பரஸ்பர பயணங்கள் நல்லுறவை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. அந்தவகையில், இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி வருகை தருவதையும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா வருகை தருவதையும் நாங்கள் வரவேற்போம்" என்றார்.