Last Updated : 24 Jun, 2015 01:11 PM

 

Published : 24 Jun 2015 01:11 PM
Last Updated : 24 Jun 2015 01:11 PM

டெல்லி கல்லூரி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு: அறிக்கை கோரியது மனிதவள அமைச்சகம்

பாலியல் புகாரில் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக பதிவாளருக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் வால்சன் தம்பு கூறும்போது, "நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அறிக்கை கோரி டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இத்தகவலை டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் எனக்கு தெரிவித்துள்ளார். நான் கல்லூரி நிர்வாகம் சார்பில் பல்கலைக்கழகக்த்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன்" என்றார்.

பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் கோரியிருப்பதை உறுதி செய்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சம்பநதப்பட்ட கல்லூரியிடமிருந்து வரும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

செயின்ட் ஸ்டீபன் கல்லூரி டெல்லி பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் வேதியியல் துறை உதவி பேராசிரியர் சத்தீஷ்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் மாணவி ஒருவர் முனைவர் பட்டத்துக் கான ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், சத்தீஷ் தனது ஆசைக்கு இணங்கினால் மட்டுமே முனைவர் ஆய்வை முடித்துக் கொடுப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி வந்ததாக புகார் கூறியுள்ளார் அந்த மாணவி.

இதுகுறித்து அம்மாணவி அளித்த புகாரில், இதற்கான முயற்சியில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி சத்தீஷ் தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக புகார் செய்தால் முனைவர் பட்டம் பெறமுடியாது என்று சத்தீஷ் மிரட்டியதால் ஆய்வை முடிப்பதற்காக பொறுமை காத்ததாக அம்மாணவி கூறியிருக்கிறார்.

மேலும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாக அக்கல்லூரி முதல்வர் மீதும் அப்பெண் புகார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x