Published : 10 Jun 2015 08:36 AM
Last Updated : 10 Jun 2015 08:36 AM

மோசடி தொலைபேசி அழைப்பை நம்பி ஏடிஎம் ரகசிய எண்ணைக் கூறி ரூ. 12,000 இழந்த கர்நாடக டிஜிபி

மோசடி தொலைபேசி அழைப்புகள் மூலம் ஏடிஎம், கடன் அட்டைகளின் (கிரெடிட் கார்டு) ரகசிய எண்ணைப் பெற்று நிதி மோசடி செய்யும் புகார்கள் ஏராளமாக வருகின்றன. அவ்வாறு ஏமாந்தவர்கள் காவல்துறையில் புகார் செய்வர். ஆனால், காவல்துறையின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவரே இதுபோன்ற மோசடி அழைப்பில் ஏமாந்து ரூ. 12,000 இழந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில குற்றம் மற்றும் கணினி பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கான பயில‌ரங்கம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்நாடக டிஜி மற்றும் ஐஜிபி ஓம்பிரகாஷ் பேசும்போது, “கடந்த ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக ஒரு நபர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அற்புதமான ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். `இம்மாத இறுதிக்குள் உங்களது ஏடிஎம் அட்டையை புதுப்பிக்க வேண்டும். இல்லாவிடில் உங்களது ஏடிஎம் அட்டை காலாவதியாகி விடும். எனவே உங்களது எடிஎம் அட்டை எண்ணையும், அதன் ரகசிய எண்ணையும் அளித்தால் உடனடியாக புதுப்பிக்கப்படும்' என்றார். இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் எனது ஏடிஎம் எண்ணையும், ரகசிய எண்ணையும் தெரிவித்தேன். அடுத்த கணமே, `என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ. 12 ஆயிரம் எடுத்திருப்பதாக' தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து எனது ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்கி விட்டேன்.

என்னை ஏடிஎம் மோசடி பேர்வழி ஏமாற்றியதை அறிந்ததும், சிறிதும் தயக்கம் இல்லாமல் குற்றப்பிரிவு மற்றும் கணினி குற்ற தடுப்பு பிரிவிடம் புகார் அளித்தேன். 2 மாத விசாரணைக்கு பிறகு டெல்லியை சேர்ந்த அஷ்ரஃப் அலி(27) என்பவரை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். பொதுமக்களும் தங்களின் ஏடிஎம் அட்டை பற்றி விவரத்தை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x