

தென்மேற்கு பருவமழையால் நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக முடங்கிப்போன மும்பை மாநகரம், நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. 3 புறநகர் முனையங்களிலும் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மும்பை நகரிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் எங்கும் வெள்ளக்காடாகியது. வழக்கமாக 10 நாட்களில் பெய்யக்கூடிய 283 மிமீ மழை நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கொட்டியது. மழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும் உள்ளூர் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாலும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் சிக்கித் தவித்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை படிப்படியாகக் குறைந்து வெள்ள நீர் வடியத் தொடங்கியது. நேற்று காலையில் லேசாக மழை பெய்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் பணிக்குச் செல்வதற்காக பொதுமக்கள் ரயில் நிலையங்களில் குவிந்தனர்.
மத்திய ரயில்வேக்கு உட்பட்ட ஹார்பர் வழித்தடம், டிரான்ஸ் ஹார்பர் வழித்தடம் உள்ளிட்ட எல்லா தடங்களிலும் புறநகர் ரயில் சேவை வழக்கமான கால அட்டவணைப்படி இயங்குவதாக மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சாலைப் போக்குவரத்தும் சீரடைந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, தானே மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மகாராஷ்டிர அரசு நேற்று விடுமுறை அறிவித்தது.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து அவசியமின்றி யாரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என மும்பை மாநகராட்சி அதிகாரி அஜய் மேத்தா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.