நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: அனைத்து முடிவுகளும் மன்மோகன் சிங் எடுத்தார்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: அனைத்து முடிவுகளும் மன்மோகன் சிங் எடுத்தார்
Updated on
1 min read

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து முடிவுகளும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் எடுக்கப்பட்டன என்று நிலக்கரித் துறை முன்னாள் இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலம், அமர்கொண்டா முர்கதாங்கல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தாசரி நாராயணராவ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இவ்வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஆஜரானார். இவருடன் காங்கிரஸ் தலைவரும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

இந்நிலையில் நீதிமன்றத்துக்கு வெளியே தாசரி நாராயண ராவ் கூறும்போது, “அப்போது நான் நிலக்கரித் துறையின் இணை அமைச்சராகத்தான் இருந்தேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அதிகாரங்களும் நிலக்கரித் துறையின் கேபினட் அமைச்சரிடமே இருந்தன. எனவே அனைத்து முடிவுகளையும், நிலக்கரித் துறையை தனது கைவசம் வைத்திருந்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கான் எடுத்தார்” என்றார்.

இவ்வழக்கு நவீன் ஜிண்டாலுக்கு சொந்தமான 2 நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பானது. இதில் தாசரி நாராயண ராவ், நவீன் ஜிண்டால் ஆகியோருடன் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, ஜிண்டால் நிறுவன அதிகாரிகள் ராஜீவ் ஜெயின், கிரிஷ்குமார் சுனேஜா உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in