மேகி நூடுல்ஸ் ஏற்றுமதிக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி

மேகி நூடுல்ஸ் ஏற்றுமதிக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட மேகி பாக்கெட்டுகளை அழிப்பதற்காக அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி தரக் கோரி மும்பை நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் மனு அளித்திருந்தது.

அந்த மனுவின் மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.எம். காண்டே மற்றும் பி.பி கோலாப்வாலா அடைங்கிய மும்பை உயர் நீதிமன்ற அமர்வு, நெஸ்லே நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்ய சுதந்திரம் இருப்பதாக குறிப்பிட்டது.

அப்போது உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஹமூத் ப்ரச்சா, "நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானதாக இருப்பதாக அவர்களே குறிப்பிட்டனர். அப்படி இருக்கையில், இதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் விரும்பினால் இந்தியாவுக்கு வெளியே தாராளமாக விற்பனை செய்யட்டும்" என்றார்.

இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஜூலை 14-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பது தெரிய வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கு தடை விதித்தன. இறுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் கையிருப்பில் உள்ள நூடுல்ஸை அழிக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 27,420 டன் மேகியில் நெஸ்லே நிறுவனத்தின் 5 உற்பத்தி ஆலைகளில் 1,422 டன் உள்ளது. இவை அனைத்தும் தற்போது மேகி நூடுல்ஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டன. 38 விநியோக மையங்களில் 8,975 டன் மேகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெஸ்லேயின் தாயகம் சுவிட்சர்லாந்தாகும். இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மொத்தம் 27,420 டன் மேகியை திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நடந்து வர, அதனை அழிக்கும் பணியும் உற்பத்தி ஆலைகளில் நடந்துவருகிறது.

ஆனால் இதனை அழிப்பதற்கான போதிய ஆலைகள் அந்த நிறுவனத்துக்கு இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in