ஹைதராபாத்: சிறுத்தையை இம்சித்த இளைஞர் கைது

ஹைதராபாத்: சிறுத்தையை இம்சித்த இளைஞர் கைது
Updated on
1 min read

ஹைதராபாதில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில், சிறுத்தையை இம்சித்து, அதைப் புகைப்படமாக எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

அரீஃப் தாஹா மேதி (26) என்ற இளைஞர் ஹைதராபாதைச் சேர்ந்தவர். இவர் நேரு உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்க கடந்த மாதம் சென்றிருந்தார்.

அப்போது அங்கிருக்கும் சிறுத்தை ஒன்றை பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பூங்கா ஊழியரிடம் லஞ்சம் அளித்து சிறுத்தை இருக்கும் தடுப்புக்குள் சென்று அதனை துன்புறுத்தியுள்ளார்.

பின்னர் சிறுத்தையை இம்சித்தபோது எடுத்துக் கொண்ட படம் மற்றும் வீடியோ பதிவுகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார்.

அவரது படம் அதிகம் பகிரப்பட்ட நிலையில், அதனை கண்காணித்த பூங்கா ஊழியர் பகதுர்புரா காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இளைஞரின் ஃபேஸ்புக் பக்கத்தை கண்காணித்த ஹைதராபாத் போலீஸார் தொடர்புடைய இளைஞரை கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது, விலங்கை சீண்டியது என இரு வேறு பிரிவுகளில் இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் விசாரணையில், "நான் டிஸ்கவரி சானலின் தீவிர ரசிகன். அந்த ஆர்வத்தில் விலங்குகளுடன் நெருக்கமாக பழக முயற்சி செய்வேன். அப்படித்தான் சிறுத்தையிடம் சென்றேன். படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தால் அதிக விருப்பங்களை பெறலாம் என்றே அப்படி செய்தேன்" என்று தாஹா மேதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதே உயிரியல் பூங்காவில், ஆமையின் மீது ஏறி நின்றவாறு எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in