டெல்லியில் அவசர நிலை கோலம்: ஆம் ஆத்மி அரசு சாடல்

டெல்லியில் அவசர நிலை கோலம்: ஆம் ஆத்மி அரசு சாடல்
Updated on
1 min read

போலி சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் கைது செய்யப்பட்டதையடுத்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மத்திய அரசு மீடு கடுமையான விமர்சனங்களைத் தொடுத்துள்ளார்.

மத்திய அரசு, துணை நிலை ஆளுநர் உதவியுடன் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று கூறிய அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்து கடந்த 3 மாதங்களில் சாதித்தது என்னவெனில் ஊழலை ஒழித்ததே. ஆனால் தற்போது ஊழல்வாதிகளெல்லாம் ஒன்று கூடி டெல்லியில் அவசரநிலைப் பிரகடனம் போன்ற ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.

சி.என்.ஜி. ஃபிட்னெஸ் ஊழல் தொடர்பாக நான் நேற்று விசாரணைக்கு உத்தரவிட்டேன். இது நடந்தது மதியம் 1 மணியளவில் இருக்கும். ஆனால் சில மணிநேரங்களில் ஊழல் ஒழிப்புப் பிரிவில் புதிய தலைவரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஊழல் ஒழிப்புப் பிரிவை அவர்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்” என்றார் மணீஷ் சிசோடியா.

காவல்துறை இணை ஆணையர் எம்.கே.மீனா, ஊழல் ஒழிப்புப் பிரிவு தலைமைக்கு திங்களன்று நியமிக்கப்பட்டார்.

"நாங்கள் சி.என்.ஜி. ஃபிட்னெஸ் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதால், ஆம் ஆத்மிக்கு பாடம் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்துதான் தோமர் மீதான போலிச் சான்றிதழ் கைது நடவடிக்கை. தோமரை ஏதோ மாஃபியா போல் நடத்தினர். சுமார் 30-40 போலீஸ் அதிகாரிகள் அவரது தொகுதி அலுவலகத்தை முற்றுகை இட்டுள்ளனர்.

முதலில் ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என்று தோமரிடம் கூறியுள்ளனர், பிறகு பாதிவழியில் ஓட்டுநரை இறக்கி விட்டு அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் என்ன கொலையா செய்துவிட்டார்? அல்லது ஓடி ஒளிந்தாரா? அவரை இப்படி அவசரகதியில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார் மணீஷ் சிசோடியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in