

ஹவாலா புகாரின்போது எம்.பி. பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன், அது போல அரசியலில் நேர்மை, நம்பகத்தன்மை அவசியம் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் குறித்து அவர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையி லான அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அத்வானிக்கு எவ்வித பொறுப்பும் அளிக்கப்படவில்லை.
அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அத்வானி, நாட்டில் மீண்டும் அவசர நிலை அமல் செய்யப் படலாம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடியை குறிவைத்தே அவர் இவ்வாறு கூறியதாக அரசியல் நோக்கர்கள் தெரி வித்தனர்.
அந்த சர்ச்சை அடங்குவதற் குள் வங்கமொழி நாளிதழுக்கு அத்வானி அளித்துள்ள பேட்டி தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 1996-ல் ஹவாலா மோசடியின்போது ஜெயின் டைரியில் எனது பெயர் இருந்த தாக சர்ச்சை எழுந்தது. உடனடி யாக எம்.பி. பதவியை ராஜினாமா செய்தேன். யாரும் என்னை நிர் பந்திக்கவில்லை. வாஜ்பாய் என்னை தடுக்க முயன்றார். ஆனால் நான் யாருடைய கருத் தையும் கேட்கவில்லை. மனச் சாட்சிபடி பதவி விலகினேன். நான் நிரபராதி என்று உறுதியான பின்னரே தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனேன்.
அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய் யக்கூடாது, அரசியலில் நேர்மை மிகவும் அவசியம். என்னை குறித்து மட்டுமே நான் பேச முடியும். மற்றவர்கள் குறித்து கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அத்வானியின் பேட்டி தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.