

ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இன்று சர்வதேச யோகா தினம் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் உரையாடியபோது, பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 21ம் தேதியை 'சர்வதேச யோகா தின'மாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற ஐ.நா.மன்றம் டிசம்பர் மாதத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்த ஆண்டு முதன்முறையாக ஐ.நா.வில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதனை யொட்டி, நியூயார்க்கில் உள்ள ஐ.நா.அலுவலகத்துக்கு நேற்று சுஷ்மா புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்வில் ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன் கலந்துகொள்ள இருக்கிறார்.
ஏர் இந்தியா விமானம் மூலம் நியூயார்க் சென்றுள்ள சுஷ்மா, தான் செல்வதற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் 'நியூயார்க்கிற்குப் போகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.