அருணாச்சல பிரதேசத்தில் 2 பெரிய அணைக்கட்டுகள்: சமூகநல அமைப்பு கடும் எதிர்ப்பு

அருணாச்சல பிரதேசத்தில் 2 பெரிய அணைக்கட்டுகள்: சமூகநல அமைப்பு கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

அருணாச்சலப்பிரதேசத்தில் சியாங் நதியில் இரண்டு மிகப்பெரிய அணைகள் கட்டும் மத்திய அரசின் திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சியாங் நதியில் அணைகள் கட்டுவது என்பது “பாகுபாடு, ஏகாதிபத்தியம் மற்றும் புதிய-காலனியாதிக்கம்” என்று சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

ஜூன் 4-ம் தேதி மத்திய நீராதாரத்துறை அமைச்சர் உமா பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, “அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அசாமில் ஏற்படும் பயங்கர வெள்ளத்துக்கு காரணம் சியாங் நதி, இங்குதான் வெள்ளத்துக்கு நம்மிடம் விடை உள்ளது” என்று அணைக்கட்டுவது பற்றி சூசகமாகக் குறிப்பிட்டார்.

அசாம் முதல்வர் தருன் கோகய், இது குறித்து தங்கள் மாநிலத்திடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் உமா பாரதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு சியாங் மக்கள் கழகம் என்ற அரசு சாரா சமூக நல அமைப்பு ஃபேக்ஸில் தங்கள் கவலைகளை அனுப்பியுள்ளது. அதில், “அணைகள் கட்டும் முடிவு, வடகிழக்கு மக்கள் மீதான மத்திய அரசின் வளர்ப்புத்தாய் மனோநிலை” என்று சாடியுள்ளது.

"ஒரு புறம் கங்கை நதியை சுத்தம் செய்து அதனை காப்பற்ற சுறுசுறுப்பாக இயங்குகிறீர்கள், ஆனால் அதே வேளையில் டெல்லியில் அமர்ந்து கொண்டு சியாங் நதியில் பேரழிவுக்கு திட்டமிடுகிறீர்கள்" என்று அந்த பேக்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஓயார் காவோ, சியாங் நதியும் கங்கை நதி போல் எங்களுக்குத் தாய்தான் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த அமைப்பு அணைத்திட்டம் குறித்து கேள்வி எழுப்பும் போது, “அருணாச்சல பிரதேசத்தின் எந்த பகுதிக்கு வருகை தந்தீர்கள், அறிக்கை விடும் முன் யாருடன் பேச்சு நடத்தினீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.


அசாமில் பிரம்மபுத்திரா நதியாக ஓடும் நதியின் தொடக்கம் சியாங் நதியாகும், இதில் 40 அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பினால் இந்தத் திட்டங்கள் சாத்தியமாகவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் பாசிகட்டில் நடந்த தேர்தல் கூட்டமொன்றில் நரேந்திர மோடி பேசும்போது, இப்பகுதி மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், சிறிய நீர் மின்சாரத் திட்டங்களே சரியானது என்று கூறியுள்ளார்.

ஆனால் ஜூன் 4-ம் தேதி அணைகள் கட்டுவதான உமாபாரதியின் சூசகமான பேச்சு அங்கு குழப்பத்தையும், அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

இது குறித்து சமூக அமைப்பு கேள்வி எழுப்பும் போது, “மாநிலத்தை நிதிநெருக்கடிகளிலிருந்து காப்பாற்றும் முயற்சியா அல்லது, மின்சார உற்பத்தி தனியார் நிறுவனங்களின் பயன்களுக்கான முயற்சியா? சிலபல ஊழல் அரசியல்வாதிகளின் பயன்களுக்காக சியாங் நதியை தியாகம் செய்ய முடியாது”என்று கூறியுள்ளது.

சியாங் நதியின் பல கிளைநதிகள் சுமார் 2.5 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. அணைகட்டினால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூகநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in