

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் மத்திய அரசும் குஜராத் அரசும் செயல்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2004 ஜூன் 15-ம் தேதி குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், உள்ளிட்ட நால்வர் அந்த மாநில போலீஸார், புலனாய்வுத் துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது. அதில் அப்பாவிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து போலி என்கவுன்ட்டர் செய்ததாக 7 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரி ராஜிந்தர் குமார் உட்பட நான்கு பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதில் தொடர்புடைய ராஜிந்தர் குமார் உட்பட 4 புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று இஷ்ரத் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களம் இறங்கியுள்ளது. அந்தக் கட்சித் தலைமை நேற்று வெளி யிட்ட அறிக்கையில், இஷ்ரத் ஜஹான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உளவுத் துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் செயல்படுகின்றன. இது மனச்சாட்சிக்கு விரோத மான செயல் என்று தெரிவித்துள்ளது.