டெல்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்: பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார்

டெல்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்: பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

டெல்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை அடுத்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “200 கிமீ தொலைவு உள்ள இந்த பாதையில் 2 முறை சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். எந்த நேரத் திலும் ஒப்புதல் கிடைத்துவிடும். எனவே, ஜூன் 9-ம் தேதி இந்த ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

5,400 குதிரை சக்தி ஆற்றல் மிக்க மின்சார என்ஜின், 12 நவீன பெட்டிகளுடன் ரயில் தயார் நிலையில் உள்ளது. அதிகபட்சம் 160 கிமீ வேகம் செல்ல்க்கூடிய இந்த ரயில், 200 கிமீ தொலைவை 105 நிமிடங்களில் சென்றடையும்.

நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவை குறிக்கும் விதமாக, ரயில்வே மே 26 முதல் ஜூன் 9-ம் தேதி வரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. பிரதமருக்கு நேரம் கிடைத்தால், ஜூன் 9-ம் தேதி அவர் கொடியசைத்து இந்த ரயிலை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

160 கிமீ வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதால், பாதுகாப்பு ஆணையர் சில அச்சங்களை தெரிவித்தார். அது களையப்பட்டுவிட்டது. சில இடங்களில் ரயில் பாதைகளின் பக்கவாட்டில் வேலி போடப்பட்டுள்ளது. சிக்னல் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி பிரேக் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே எச்சரிக்கும் வசதி, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் இந்த ரயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிமான் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் சதாப்தி ரயிலில் உள்ளதைவிட 25 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்படும்.

இதேபோன்ற ரயிலை கான்பூர்-டெல்லி, சண்டீகர்-டெல்லி, ஹைதராபாத்-சென்னை, நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா-மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் உள்ளிட்ட மேலும் 9 வழித்தடங்களில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in