காந்தி படுகொலை வழக்கின் எப்ஐஆர் நகலை அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு

காந்தி படுகொலை வழக்கின் எப்ஐஆர் நகலை அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

மகாத்மா காந்தி படுகொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்), குற்றப்பத்திரிகை நகல்களை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948 ஜனவரி 30-ம் தேதி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார்.

அப்போது டெல்லி போலீஸார் பதிவு செய்த எப்ஐஆர், குற்றப்பத்திரிகை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் நகல்களை அளிக்கக் கோரி ஒடிஸாவை சேர்ந்த ஹேமந்த் பாண்டா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தை தேசிய ஆவண காப்பகம், காந்தி ஸ்மிருதி அலுவலக இயக்குநர், தர்சன் ஸ்மிருதி அலுவலகங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில், மனுதாரர் ஹேமந்த் பாண்டே தங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து சட்டத்துக்கு உட்பட்டு தேவைப்பட்ட ஆவணங்களை தேடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஸ்மிருதி, தர்சன் ஸ்மிருதி அலுவலகங்கள் அளித்துள்ள பதிலில், குடும்பத்தினரின் விருப்பப்படி காந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்ஐஆர், குற்றப்பத்திரிகை தொடர்பான நகல்கள் தங்களிடம் இல்லை என்று அந்த அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மனுதாரர் ஹேமந்த் பாண்டே மத்திய தகவல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில், மத்திய உள்துறை அமைச்சகத்திடம்தான் நான் விண்ணப்பம் அளித்துள்ளேன், அவர்கள்தான் முறையான பதிலை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மனுதாரர் கோரும் எப்ஐஆர், குற்றப்பத்திரிகை நகல்களை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவேறை அந்த ஆவணங்கள் இல்லையென்றால் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தகவல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in