அரிதினும் அரிதான நோயால் பாதித்த 16 நாள் குழந்தைக்கு உதவும் மும்பை மருத்துவமனை

அரிதினும் அரிதான நோயால் பாதித்த 16 நாள் குழந்தைக்கு உதவும் மும்பை மருத்துவமனை
Updated on
1 min read

குறைப்பிரசவத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தைக்கு மும்பை மருத்துவமனை ஒன்று சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறது.

வழக்கமான தலையின் அளவைக் காட்டிலும், மிகவும் சிறியதாக 26 வாரக் கருவின் தலை அளவின் அமைப்பையே கொண்டுள்ள இக்குழந்தைக்கு மக்கள் அளிக்கும் நன்கொடைகள், மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

"மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பமான அஜய் டோட் மற்றும் மம்தா தம்பதிக்கு, பிரசவ தேதிக்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே மே 30 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை, மருத்துவ மொழியில் 'மைக்ரோசெஃபலி' என்று அழைக்கப்படும் நரம்பியல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கத்தை விட சிறிய சுற்றளவிலான தலையோடு குழந்தை பிறப்பதே மைக்ரோசெஃபலி என்று அழைக்கப்படுகிறது", என்கின்றனர் நவ்ரோஜ்சீ வாடியா மகப்பேறு மருத்துவமனையின் மருத்துவர்கள்.

குழந்தை பிறப்பின் போது, ஹார்மோன்கள் மாற்றத்தாலும், மன ரீதியான மாற்றத்தாலும், தாய்க்கு ஏற்படுகின்ற மனத் தளர்ச்சி குழந்தையைப் பாதித்திருக்கிறது.

அசாதாரணமான குரோமோசோம்கள் அல்லது உள்-கருப்பை தொற்றின் காரணமாகவே இம்மரபணு நோய் ஏற்பட்டிருக்கக்கூடும் என்கிறார் மும்பை மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப்பிரிவுத் தலைவர் சுதா ராவ்.

இது குறித்துப் பேசியவர், "குழந்தை வளரும்போது, மூளை சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இக்குழந்தையின் இதயத்தில் சின்னதாய் ஓட்டையும் இருக்கிறது. பிறக்கும் 1000 குழந்தைகளில் 0.1 முதல் 0.2 குழந்தைகள் மைக்ரோசெஃபலியால் பாதிக்கப்படுகின்றன" என்றார்.

மேலும், "சனிக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. 48 மணி நேரத்தில் குழந்தைக்கு 40 கிராம் அளவு எடை கூடியிருக்கிறது. காணத்தக்க அசைவுகளோடு, பாலை செரித்துக் கொள்ளவும் உடல்நிலை ஒத்துழைக்கிறது. அடுத்த 15 நாட்களுக்கு, குழந்தைக்கு தொடர்ச்சியாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்படும்.

குழந்தையின் உடல்நிலை, தொடர்ச்சியான மூளைத் தொற்றினால் பாதிக்கப்படுமானால், அவள் இரண்டு வருடங்கள் வரையே வாழ முடியும்; அதன் பின்னர் தீவிர கண்காணிப்போடு கூடிய சிகிச்சை தேவைப்படும். இப்போதே பல்சிறப்பு மருத்துவ அணுகுமுறையின் தேவையில் அக்குழந்தை இருப்பதால், 4 மூத்த நிபுணர்களோடு கூடிய 20 பேர் அடங்கிய மருத்துவர் குழு, சிகிச்சை அளித்து வருகிறது. குழந்தை, தன்னுடைய தாத்தாவால் மும்பை மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்கு வந்த குழந்தை, அதிர்ச்சிக்குள்ளாகி இருந்ததோடு, தன் எடையையும் இழந்து, தீவிரமான நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது. ரத்தப் பரிசோதனைகள், தொற்றின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததை உறுதிப்படுத்தின. நீர்ப்பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 'ஐவி திரவ' சிகிச்சைஅளிக்கப்பட்டது. குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகும் செலவை மருத்துவமனையே ஏற்றுக் கொள்ளும் என்றும் குழந்தையின் தாத்தாவிடம் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்தார் சுதா ராவ்.

உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீட்டுபவர்களால், தற்போது 1.25 லட்ச ரூபாய் சேர்க்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in