

நாடு முழுவதும் 1,100 தீவுகள், 300 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆர்வம் காட்டுகிறார் என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் தொடர்பான தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:
உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் தொடர்பாக பிரதமருக்கு நாங்கள் அனுப்பிய கேபினட் குறிப்பில், 300 கலங்கரை விளக்கங்கள், 1,100 தீவுகளை மேம்படுத்தும் பரிந்துரையை சேர்க்குமாறு பிரதமர் எங்களிடம் கூறினார். இந்த நடவடிக்கையால் நாட்டில் நீர்வழிப் போக்குவரத்து கட்டமைப்பு அதிகரிக்கும்.
பிரதமர் மோடி வங்கதேசம் செல்லும்போது, இந்தியா – வங்கதேசம் இடையே நீர்வழிப் பாதையில் சரக்கு போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
101 நீர்வழித் தடங்களை மேம்படுத்துவதற்காக அடுத்த 2- 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிட விரும்புகிறோம். இதற்கு வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்.
நீர்வழிப்பாதைகளை அரசு – தனியார் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தின் கீழ் மேம்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதில் 5 திட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதில் ஒரு திட்டத்தில் எல்&டி நிறுவனம் செலவை விட 20 சதவீதம் குறைவாக தொகையில் பணிசெய்ய முன்வந்துள்ளது.
மேம்படுத்தவுள்ள 101 நீர்வழிப் பாதைகளில் 16-க்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இம்மாதத்தில் முடிய வாய்ப்புள்ளது. மேலும் 40 தடங்களுக்கான இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும்.
ஏற்கெனவே உள்ள 5 நீர்வழிப் பாதைகளில் 3 மட்டுமே இதுவரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்ற 2 பாதைகளை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரணாசி – ஹல்டியா இடையிலான 1,620 கி.மீ. நீர்வழிப்பாதையில் வாரணாசி, ஹல்டியா, சாஹேப்கஞ்ச, கொல்கத்தா ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்படும். அசாம், அந்தமான் நிகோபார், குஜராத் மாநிலத்தின் கண்ட்லா ஆகிய இடங்களில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுநீக்கும் தளங்கள் அமைக்கப்படும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.