

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காகவே காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்ப தாக கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்துள்ளார் என மத்திய மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூருவில் இருந்து வெளியாகும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றில் கலப்பதால் காவிரி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை கர்நாடகா சட்டப்படி எதிர்கொள்ள தயராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கர்நாடக அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வர இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்த தேர்தல்களில் ஆதாயம் அடைவதற்காகவே ஜெயலலிதா கர்நாடக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இது போன்ற பழிவாங்கும் அரசியலை அவர் கைவிட வேண்டும்.
ஊழலை ஒழிப்பதாக பிரச்சாரம் செய்து டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, தினமும் புதுப்புது பிரச்சினைகளில் சிக்கி வருகிறது. மக்களுக்கு நல்ல ஆட்சி வழங்க வேண்டிய ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறது. டெல்லி மாநில அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசே காரணம் என கூறுவதை ஏற்க முடியாது. என்னைப் பொறுத்தவரை அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புடன் செயல்படாமல், மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்'' என்றார்.