Last Updated : 17 Jun, 2015 10:59 AM

 

Published : 17 Jun 2015 10:59 AM
Last Updated : 17 Jun 2015 10:59 AM

ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்ஐடி விசாரணை - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் மூத்த அமைச்சர் (சுஷ்மா ஸ்வராஜ்) ஒருவர் ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் தொடர்பு வைத்துள்ளார். லண் டனில் தஞ்சமடைந்துள்ள லலித் மோடி போர்ச்சுகல் நாட்டுக்கு செல்வதற்கு தேவையான பயண ஆவணங்கள் கிடைக்க உதவி செய்ததுடன் இந்தப் பிரச்சினை முடியவில்லை.

அதையும் தாண்டி பாஜக தலைமையுடன் அவர் நெருக்கமான உறவு வைத்துள்ளார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநில கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார். அப்போது லலித் மோடியுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் அரசுக்கு தொடர்பு இருப்பதால், அதன் கீழ் உள்ள விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அமைதி யாக இருந்து வரும் பிரதமர், என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவியதாக சுஷ்மா கூறியிருப்பது சரிதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். இதை ஏற்க முடியாது. ஊழல் குற்றம்சாட்டப்பட்டு வெளிநாட்டில் உள்ள லலித் மோடியை இந்தியா வுக்குக் கொண்டுவர உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத் துறையும் மற்ற விசாரணை அமைப்புகளும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

இதுகுறித்து, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “கருப்புப் பணத்தை மீட்பேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இப்போது கருப்புப் பணத்தை பதுக்கிய நபருக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்றார்.

சுஷ்மா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினரும் மகளிர் காங்கிரஸாரும் டெல்லியில் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x