2ஜி முறைகேடு மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி ஆதாயம்: சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு

2ஜி முறைகேடு மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி ஆதாயம்: சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு
Updated on
1 min read

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, சட்டவிரோதமாக 2 ஜி அலைக்கற்றை உரிமத்தை தகுதியற்ற நிறுவனங்களுக்கு அனுமதித்தார். அதற்குப் பதிலாக, திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு சொந்தமான கலைஞர் டிவி நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி பணம் அளிக்கப்பட்டது என சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தனது இறுதி வாதத்தில் தெரிவித்துள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கின் இறுதி வாதம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தொடங்கியது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்குப் பிரதிபலனாக, கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் சுமார் ரூ.200 கோடி முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்ததாக, அமலாக்கத் துறை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில், மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக எம்.பி. கனிமொழி உட்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் வாத பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இறுதி வாதம் தொடங்கியது. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார்.

அப்போது, முறைகேடாக 2 ஜி உரிமம் வழங்கியதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது குழும நிறுவனமான டைனமிக்ஸ் ரியாலிட்டி மூலம் குசோகான் ரியாலிட்டி நிறுவனம் மற்றும் சினியுக் மீடியா மற்றும் என்டர்டெயின்ட் நிறுவனங்கள் வழியாக ரூ. 200 கோடியை கலைஞர் டிவிக்கு அளித்துள்ளது. இது சட்டவிரோத பணப் பரிவர்த்தனைதான்.

கலைஞர் டிவி கனிமொழி மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோருக்குச் சொந்தமானது. ஆ.ராசா அதே கட்சியைச் சேர்ந்தவர். ஆ.ராசா மற்றவர்களுடன் இணைந்து இக்குற்றத்தைச் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in