Last Updated : 03 Jun, 2015 02:54 PM

 

Published : 03 Jun 2015 02:54 PM
Last Updated : 03 Jun 2015 02:54 PM

சுவிஸ் வங்கி காப்பியா மேக் இன் இந்தியா லோகோ?- மத்திய அரசு விளக்கம்

சுவிஸ் வங்கியின் விளம்பரத்தை பார்த்து 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் லோகோ அமைக்கப்பட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு சார்பில், தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் அமிதாப் கான்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "மேக் இன் இந்தியா லோகோவில் உள்ள சிங்க உருவம் சுவிஸ் வங்கியின் லோகோவை பார்த்து அமைக்கப்படவில்லை.

இந்த லோகோவில் உள்ள சக்கரங்கள் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை குறிப்பது. மிக பழமையான காலத்தில் இருந்தே இந்தியாவின் அதிகாரப்பூர்வ சின்னமாக சிங்க உருவம் இருந்து வருகிறது.

நமது அரசு சின்னங்களில் இருக்கும் அம்சங்களை இணைத்து தான் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கான லோகோ அமைக்கப்பட்டுள்ளது.

அதில் இருக்கும் அம்சங்கள் அனைத்துக்கும் நமது நாட்டின் பாரம்பரிய தொடர்பு உள்ளது. அத்தகைய வகையில் தொழில்துறைக்கு ஏற்றவாறு லோகோ அமைக்கப்பட்டுள்ளது" என்று படங்களுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'மேக் இன் இந்தியா' திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் மூலம் உருவாகும் அதிக உற்பத்தியை ஏற்றுமதி செய்யலாம், ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் நிதிப்பற்றாக்குறை குறையும். மேலும் வேலையில்லாமல் இருக்கும் பல இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தோடு 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

இதனிடையே, இந்தத் திட்டத்துகான லோகோ, சுவிட்சர்லாந்து வங்கியின் விளம்பரத்தை பார்த்து காப்பி அடித்து அமைக்கப்பட்டதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி வெளியானது.

சுவிஸ் வங்கியின் லோகோ அந்நாட்டு ரயிலில், பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதனைப் பார்த்து லோகோ அமைக்கப்பட்டிருப்பதாக அந்த பத்திரிகையால் சுட்டிக் காட்டப்பட்டது.

சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட பத்திரிகையின் செய்தி சூடு பிடிக்க தொடங்கியதை அடுத்து மத்திய அரசுத் தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x