காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை: வேகமாக நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் - தமிழகத்துக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை: வேகமாக நிரம்புகிறது கிருஷ்ணராஜசாகர் - தமிழகத்துக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
Updated on
1 min read

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபினி அணையை தொடர்ந்து, கிருஷ்ணராஜசாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ் பேட்டை, சோம்வார்பேட்டை, மடிகேரி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள‌தால் குடகு மாவட்டத்தில் பெரும்பாலான‌ பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ம‌க்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அதன் குறுக்கேயுள்ள‌ கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் 70 அடிக்கும் குறைவாக இருந்த கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் கனமழை காரண‌மாக வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால் 124.8 அடி கொள்ளள வைக் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை நேற்று 105.5 அடியை எட்டியது. நீர் வரத்து வினாடிக்கு 33,287 கனஅடியாக உள்ளது. வெளியேற்றப்படும் நீர் வினாடிக்கு 384 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் என எதிர்ப்பார்க் கப்படுகிறது.

இதேபோல கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், மைசூரு விலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கட‌ல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணை நேற்று முன்தினம் அதன் முழு கொள்ளளவான 19.5 டிஎம்சியை எட்டியது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை நடத்தினார்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்து‌க்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in