

சிபிஎஸ்இ சார்பில் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியாக இருந் தது. இதனிடையே ஹரியாணாவில் வினாத்தாள் கசிவு காரணமாக இத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த முறைகேட்டில் எவ்வளவு பேர் பயனடைந்தார்கள் என அறிக்கை அளிக்கும்படி ஹரியாணா போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதாபா முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹரியாணா போலீஸ் தரப்பில் வாதிடும் போது, “வினாத்தாள் கசிவு காரண மாக இதுவரை 44 பேர் பயனடைந் துள்ளதாக கண்டறிந்துள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளது. சுமார் 700 மாணவர்கள் பயனடைந்திருக்க லாம் என சந்தேகிக்கிறோம். எனவே இத்தேர்வை ரத்து செய்யவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். “44 மாணவர்கள் மட்டும் பயனடைந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், 6.3 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுதுமாறு கூறமுடியாது” என்றார்.
இதற்கு நீதிபதிகள் கூறும்போது, “சட்ட விரோதமாக ஒரேயொரு மாணவர் பயனடைந்தாலும் அவர் தேர்வின் தரத்தை சீரழிக்கும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவ நுழைவுத் தேர்வின் புனிதத்தை நாங்கள் தியாகம் செய்ய முடியாது. இதைக் காக்க நீங்கள் தவறிவிட்டீர்கள். தேர்வு நடைமுறைகள் மிகவும் பழமையானவை.
கடந்த 2 3 ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் சிபிஎஸ்இ உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்றனர்.
“இத் தேர்வை மீண்டும் நடத்துவதா என்பது குறித்து வரும் 15-ம் தேதி நீதிமன்றம் முடிவு செய்யும். அதுவரை நுழைவுத் தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிடக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.