

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பது மற்றும் மேகேதாட்டுவில் அணை கட்டுவது உள்ளிட்ட விவகாரங் களில் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணைகள் கட்டு வதைத் தடுக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் மனு அளித் துள்ளது.
இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு, 'பெங்களூருவில் இருந்து வெளியேறும் கழிவு நீரை காவிரி யில் கலந்து நீரை மாசுப்படுத்து வதாக' கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமை யில் பெங்களூருவில் நேற்று அம் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேகேதாட்டு வில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசு தொடுத்துள்ள 2 வழக்குகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீடு, மேகேதாட்டுவில் புதிய அணை கள் கட்டி கூட்டுகுடிநீர் மற்றும் நீர்மின் நிலையம், காவிரி, தென் பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் ஆகியவற்றை வைத்து தமிழக அரசு தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. கர்நாடக விவசாயிகள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டும். எனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
ஜெயலலிதா பழி வாங்குகிறார்
இறுதியாக முதல்வர் சித்தராமையா பேசும்போது, “காவிரி நீர் பங்கீடு, மேகேதாட்டு வில் குடி நீர் திட்டம் ஆகியவற்றில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது கர்நாடகா காவிரி ஆற்றை மாசுபடுத்துவதாக உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு வழக்கு தொடுத் துள்ளது. இந்த விவகாரத்தில் வலுவான முடிவை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட வழக்குக்கு சட்டப்படி தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.