குஜராத்தில் கனமழைக்கு 45 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

குஜராத்தில் கனமழைக்கு 45 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்
Updated on
1 min read

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குஜராத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 45-ஐ தாண்டி உள்ளது. இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தெற்கு குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 130 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது அதிகம். மழை காரணமாக இம்மாநிலத்தில் 45 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக, அம்ரேலி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஷெத்ருஞ்சி ஆற்று வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 60 கிராமங்கள் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 36 பேர் பலியாயினர்.

இதுகுறித்து மாநில மீட்புப் படை ஆணையர் டி.என்.பாண்டே கூறியதாவது:

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மழை காரணமாக வீடுகளை இழந்தோர், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோருக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆர்எப்) நிவாரணம் வழங்கப்படும். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இப்போது மழை சற்று குறையத் தொடங்கி உள்ளது. எனினும் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்ரேலி மாவட்ட ஆட்சியர் எச்.ஆர்.சுதர் கூறும்போது, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் என்டிஆர்எப், விமானப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

இதுகுறித்து மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெயந்த சர்கார் கூறும்போது, “காற்றழுத்தம் மத்தியப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இந்த காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்துவிடும். இதனால் மழை படிப்படியாகக் குறையும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in