

தன்னை அடித்து உதைத்ததாக வும், மன ரீதியாக கொடுமைப் படுத்தியதாகவும் டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி எம்எல்ஏவு மான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா பாரதி டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ஜூன் 26-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டு மென்று சோம்நாத் பாரதிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இந்த விவகாரத்தால் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
2010-ம் ஆண்டில் திருமணம் ஆனதில் இருந்தே நான் அடி, உதைக்கு உள்ளாகி வருகிறேன். எனவே திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு எனது குழந்தைகளுடன் கண்ணியமாக வாழ விரும்புகிறேன் என லிபிகா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் பர்கா சிங் கூறியதாவது: திருமணம் ஆனதில் இருந்தே லிபிகா பாரதி, அவரது வீட்டில் வன்முறைக்கு உள்ளாகியது தெரியவந்துள்ளது. 2 குழந்தைகள் உள்ள நிலையிலும் அவர் துன்புறுத் தப்படுகிறார். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது லிபிகாவை அடித்த சோம்நாத், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அநாகரிகமாக பேசியதாகவும் நடந்த சம்பவத்தை லிபிகா என்னிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார் என்றார்.
இப்போது கேரளத்தில் உள்ள சோம்நாத் பாரதி, “இந்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க பொய்யான புகார். இதற்கு பக்கபலமாக யாரோ உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
டெல்லி மாளவியா நகர் தொகுதி எம்எல்ஏ சோம்நாத் பாரதி (41). 2014-ம் ஆண்டில் 49 நாள் கேஜ்ரிவால் அரசில் சட்ட அமைச்சராக இருந்தவர்.
தெற்கு டெல்லி காலனியில் ஆப்பிரிக்க பெண்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் நள்ளிரவில் அவர் நடத்திய அதிரடி சோதனை ஆம் ஆத்மி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தியது. போலி கல்விச் சான்றிதழ் மோசடி புகார் காரணமாக சட்ட அமைச்சர் பதவியிலிருந்து ஜிதேந்திர சிங் தோமர் பதவி விலகிய மறுநாளே புதிதாக சர்ச்சை வெடித்துள்ளது.