

இந்திய வெளியுறவு துறையின் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை சுஷ்மா ஸ்வராஜ் பெறுகிறார். இவருக்கு கூடுதலாக வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறையும் அளிக்கப்பட்டுள்ளது.
சுஷ்மாவுக்கு இது போன்ற சாதனைகள் புதிதல்ல. இதற்கு முன்பு அவர் 25 வயதில் ஹரியாணா அரசின் இளம் அமைச்சர், டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதல்வர், இந்திய அரசியல் கட்சிகளில் முதல் பெண் செய்தித் தொடர்பாளர் போன்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்.
இந்தியாவுக்கு உலக அளவில் செல்வாக்கு அதிகரித்து வரும் வேளை யில், மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கிய அமைச்சகமான வெளியுறவுத் துறைக்கு சுஷ்மா பொறுப்பேற்கிறார்.
ஆனாலும், அவர் ஆசிய விவகாரங்களில்தான் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வந்த பிறகு அவரது பேச்சும் அணுகுமுறையும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தேசிய அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகின.
எனவே, அவர் வெளியுறவு அமைச்சராக இருக்கும் நிலையில் இலங்கை விவகாரத்தில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘சுஷ்மா ஸ்வராஜ் மிகச் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகத் திகழ்கிறார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ராஜபக்சே திறந்து பாராட்டியது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தான், சீனா
வெளியுறவைப் பொறுத்தமட்டில், பாகிஸ்தான் மற்றும் சீனா விவகாரங்கள் எப்போதுமே சவாலானவை. வெளி யுறவு அமைச்சகத்தில் தற்போது வெளியுறவுச் செயலாளராகவும் இருப் பவரும் தமிழரான சுஜாதா சிங் என்ற பெண்மணிதான்.
1977-ம் ஆண்டு ஹரியாணாவில் தேவிலால் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார் சுஷ்மா. 1979-ம் ஆண்டு ஹரியானா மாநில பாஜக தலைவராகவும் அவர் பதவியேற்றார். ஏழு முறை நாடாளுமன்றத்துக்கும், மூன்று முறை சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிந்துள்ளார். 13 நாள் வாஜ்பாய் அரசில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அவர், அடுத்த வாஜ்பாய் அரசில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்டோபர் 1998-ல் டெல்லியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட போது அவரை எதிர்த்த மூத்த தலைவர்களில் சுஷ்மாவும் ஒருவர். அத்வானிக்கும் நெருக்கமான தலைவரான சுஷ்மாவிற்கு முக்கிய பதவி அளித்து கௌரவித்தது மோடியின் ராஜதந்திரத்தைக் காட்டு கிறது.