

மகள் தனது காதலனுடன் திருமணம் செய்துகொள்ளும் முயற்சியைத் தடுக்கும் வகையில், அவரது கால்களில் சங்கிலியைப் பூட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்த தந்தையை குஜராத் போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டம் சோட்டா உதேபூர். இங்குள்ள சிமோல் கிராமத்தில் வசிப்பவர் வசந்த்பாய் ரத்வா. இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
இவரது மகளுக்கும் தல்சார் கிராமத்தில் உள்ள ஒருவருக்கும் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண்ணோ ஏற்கெனவே ஒருவரை காதலித்து வந்தார். அதனால் இந்தத் திருமணத்தில் விருப்பம் கொண்டிராத அவர், தன்னுடைய பிறந்த வீட்டிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது காதலனுடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். எனினும், பக்கத்து கிராமத்தில் தலைமறைவாக இருந்த அவர்களை பெண்ணின் உறவினர்கள் திரும்ப அழைத்து வந்தனர்.
அந்தப் பெண்ணுக்கு தாய் இல்லை. எனவே, அவரை வீட்டில் பாதுகாத்திருக்க யாரும் இல்லாத காரணத்தால், எங்கே தான் இல்லாத சமயத்தில் காதலனுடன் சென்றுவிடுவாரோ என்று அஞ்சிய அந்தப் பெண்ணின் தந்தை, கடந்த திங்கள்கிழமை தனது மகளின் காலில் சங்கிலைப் பூட்டி, அதனை தனது குடிசைக்குள் இருக்கும் மரக்கட்டையுடன் பிணைத்துவிட்டார்.
அன்றே இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சமூக ஆர்வலர் ஒருவர் 181 அபயம் பெண்கள் அமைப்புக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். உடனே ஆம்புலன்ஸ் சகிதமாக வந்திறங்கிய அந்த அமைப்பினர் அந்தப் பெண்ணை விடுவிக்க முயற்சி செய்தனர். இதற்கு கிராமத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை உள்ளூர் போலீஸாரின் துணையுடன் சமாளித்து அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அந்தப் பெண்ணின் தந்தை மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 342ன் (சட்டத்துக்குப் புறம்பாக ஒருவரை அடைத்து வைத்தல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.