

முதல் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நேற்று டெல்லி ராஜபாதை யில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 35 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தினத்தை அதிகாரப்பூர்வமாக்கிய ஐ.நா.வுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, மக்களுடன் இணைந்து யோகா செய்தார்.
மோடியின் 21 வகை ஆசனம்
இந்நிகழ்ச்சிக்காக டெல்லி ராஜபாதையில் மேடையும், ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து யோகா செய்ய தரை விரிப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. யோகா குரு ராம்தேவ், மதத் தலைவர்கள், யோகா ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் மேடையிலிருந்து கீழே வந்து மக்களோடு சேர்ந்து மோடியும் 30 நிமிடங்கள் யோகப் பயிற்சி செய்தார். 64 வயதாகும் அவர் 21 வகையான யோகாசனங்களை செய்தார். பளீர் வெண்மையான உடை, தேசியக் கொடி வண்ணத்திலான துண்டு அணிந்து மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மக்களை வலிமையாக்கும் யோகா
முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, “இது மக்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தவே தொடங்கப் பட்டது. உலகத்தை பதற்றமில்லாத இடமாக மாற்றவும், நல்லிணக்கம் ஏற்படவும் யோகா உதவும். யோகா வெறும் உடல் வலிமைக்காக மட்டுமல்ல. அப்படி எண்ணுவது பெரிய தவறு. அப்படியிருந்தால் சர்க்கஸில் வேலை செய்யும் அனைவரும் யோகிகள் என அழைக்கப்படுவார்கள். உடலை இலகுவாக ஆக்குவது மட்டும் யோகாவின் வேலையல்ல.
இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதோடு மனிதனின் மனதை பயிற்றுவிக்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை தொடங்குகிறோம். இது தொடர்ந்து நடக்கும். இது மனிதகுலத்துக்கான நிகழ்ச்சி. நல்லிணக்கத்தை பரப்ப, பதற்றம் இல்லாத உலகை உருவாக்கும் முயற்சி” என்று பேசினார்.
ராஜபாதையில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மோடி, ராஜபாதை, யோகபாதையாக மாறும் என யாரேனும் நினைத்ததுண்டா? என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் மோடி கலந்துரை யாடினார்.
பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புபோல, யோகா தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
டெல்லி போலீஸார் உட்பட ஆயுதம் ஏந்திய 5,000 வீரர்கள் பாதுகாப்பு, கண்காணிப்பில் ஈடு பட்டனர். 18 காவல் துணை ஆணை யர்கள் மற்றும் 30 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தினர். மோடி குண்டு துளைக்காத உடை அணியாது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ராஜபாதையில் காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி, 35 நிமிடம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஆயிரக்கணக்கான யோகா பயிற்சியாளர்கள், அரசு அதிகாரி கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் செய்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க 152 வெளிநாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் பங்கேற்றனர்.
2 கி.மீ. தூரம் வரை
இந்த நிகழ்வை கின்னஸ் உலக சாதனையாக மாற்றவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கின்னஸ் சாதனையை பதிவு செய்வதற்காக அதன் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
யோகா நிகழ்ச்சியை பொது மக்கள் பார்க்க வசதியாக ராஜபாதை நெடுகிலும் பெரிய அளவில் 2 ஆயிரம் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. டெல்லியில் விஜய் சவுக் பகுதி அருகில் இருந்து இந்தியா கேட் வரை சுமார் 2 கி.மீ. தூரம் வரை மக்கள் யோகாசனம் பயிற்சி செய்தனர்.
யோகா நிகழ்ச்சி நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களில்கூட நடை பெற்றது. யோகா நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனிலும் இணையதளத் திலும் நேரடியாக ஒளிபரப்பப் பட்டன.
ஐ.நா.வில் கிடைந்த அங்கீகாரம்
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, ஐ.நா. கூட்டத்தில் முதல்முறையாகப் பேசினார். அப்போது, உடல்நலம், மனநலம் இரண்டையும் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும் இந்தியாவின் தொன்மையான யோகாவுக்கென தனி தினம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன.
அதன்படி, முதல்முறையாக ஜூன் 21-ம் தேதியான நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.