

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரி கைக்குச் சொந்தமான கோடிக் கணக்கான மதிப்புள்ள சொத்து களை, யங் இந்தியன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய நிறுவனத்துக்கு வாங்கி அந்த சொத்துகளை அபகரிக்க முயன்றதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் மீது, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனிநபர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேஷனல் ஹெரால்டு சொத்து களை பரிமாற்றம் செய்தபோது, வரி விலக்கு பெற்றதாகவும், அதில் முறைகேடு நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது.
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, “நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதுபோன்ற அரசியல் வேட்டைகள், எங்களை மீண்டும் எழுச்சி பெறச் செய்யவும், வலிமையாக எதிர்த்துப் போராடவுமே உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.