

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை சந்தித்து சர்ச்சைக்குள்ளான மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியாவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் சிவசேனா நிலைப்பாட்டு கொண்டிருப்பது, தேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லலித் மோடிக்கு விசா அனுமதி பெற்று தருவதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கும் பங்களிப்பு இருப்பதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் போர் கொடி உயர்த்தியுள்ள நிலையில், மத்தியில் இருக்கும் பாஜக அரசு, மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியாவுக்கு மட்டும் ஆதரிக்காமல் இருப்பது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா தரப்பில் குறிப்பிடும்போது, "சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு பாஜக ஆதராவாக இருக்கும் என்பது நிச்சயமானது. ஆனால் நியாயப்படி, அதே ஆதரவை மும்பை காவல் ஆணையர் மரியாவுக்கு அரசு அளிக்க வேண்டும்.
தீவிரவாதிகளின் பிடிக்குள் இருந்த மும்பையை பாதுகாக்க காவல் ஆணையர் ராகேஷ் மரியா சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார். சமூக விரோத கும்பல்களுக்கும் ரவுடிகளுக்கும் முடிவு கட்டினார். அத்தகைய சிறப்பான அதிகாரிக்கு நியாயமாக அரசு ஆதரவு அளிக்கத்தான் வேண்டும். ஆனால் அவருக்கு இந்த அரசு நெருக்கடி அளித்து வருகிறது" என்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு லண்டனில், ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை மும்பை ஆணைய ராகேஷ் மரியா சந்தித்ததாக, அது தொடர்பான படங்கள் சனிக்கிழமை வெளியாகின.
ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை, தான் சந்தித்தது தொடர்பாக மகாராஷ்டிர அரசிடம், மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியா திங்கள்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார். எனினும், அறிக்கையில் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
லண்டனில் லலித் மோடியை சந்தித்ததை மரியாவும் ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு மகாராஷ்டிர அரசில் நெருக்கடி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.