

வீட்டு வசதிக் கடன் மீதான வட்டி குறைப்பு, அனைவருக்கும் 2020-க்குள் வீட்டு வசதி ஆகியவை தனது முன்னுரிமை என்று தெரிவித்தார் அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத்துறை அமைச்சராக புதன்கிழமை பொறுப்பேற்ற பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:
நகரங்களில் வசிப்போரின் எதிர்பார்ப்புகளை திருப்திப் படுத்தும் வகையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 100 நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்குவதும் முக்கிய முன்னுரிமைகளில் உள்ளது.
அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியின்போது வீட்டுக்கடன் வட்டி விகிதம் 11 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது அது 10 சதவீத மாக உயர்ந்துள்ளது.அனை வருக்கும் வீட்டு வசதி ஏற்படுத் தித் தர கார்ப்பரேட் நிறு வனங்கள் ஒத்துழைப்பு நல்கலாம். நிறுவனங்கள், தமது தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித்தரும் பொறுப்பை ஏற்கவேண்டும். மாநில அரசுகளும் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது எனது விருப்பம். எமது இந்த லட்சியத்தில் எங்களுடன் நகராட்சிகளும் இணைய வேண்டும்.
இப்போது பணியில் உள்ளவர் களுக்கு மட்டும் என இல்லாமல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தர எல்ஐசி, வங்கிகள், ரயில்வே, பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் போன்றவை முன்வர வேண்டும். இந்த விவகாரம் பற்றி நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் விரைவில் விவாதிப்பேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் வந்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணி அரசு அமல்படுத்திய ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் முடிவுக்கு வருகிறது. நகரங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
துணை நகரங்களில் அடிப்படை வசதி மேம்பாடு
துணை நகரங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அங்கு வீடுகள் கட்டுவதுடன் சிறந்த பள்ளிகள், மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். 2050க்குள் 50 சதவீத மக்கள் நகரங்களில் வசிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை சமாளிப்பது சவால் மிக்கதாகும்.
ஆலய சுற்றுலாவை ஊக்குவிக்க புனித நகரங்களை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள், ஆஜ்மீர், அமிர்தசரஸ் போன்ற புனித நகரங்கள், கோவா, கேரளாவில் உள்ள தேவாலயப் பகுதிகளில் தூய்மைப் பணியும் பொது சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.