பழங்குடியினர் நலத் திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பழங்குடியினர் நலத் திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

வன்பந்து கல்யாண் யோஜனா உள்ளிட்ட பழங்குடியினர் நலத் திட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கான உயர்நிலை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி பேசினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு பழங்குடியினர் சிறந்த படை வீரர்களாக திகழ்வதாக தெரிவித்த மோடி, பழங்குடியினர் பகுதியில் வளர்ச்சி மையங்களை அடையாளம் கண்டு அங்கு கல்வி வளர்ச்சி, சுகாதார மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துமாறு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டார்.

பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மின்சாரம் மற்றும் செல்போன் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தத் திட்டங்களை செயல்படுத்தும்போது, குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளும் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு வசதியை வழங்க வகை செய்யும் ஜன் தன் யோஜனா, பிரதமரின் ஆயுள், விபத்து காப்பீடு, அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றால் பழங்குடியினர் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளனர் என்றும் பிரதமர் கேட்டறிந்ததார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in