மேற்குவங்க கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: முதன்மை குற்றவாளியாக கருதப்படுபவர் கைது

மேற்குவங்க கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: முதன்மை குற்றவாளியாக கருதப்படுபவர் கைது
Updated on
1 min read

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில், முதன்மை குற்றவாளியாக கருதப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் நஸ்ருல் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கங்கனாபூர் அருகே ரனாகட்டில் ஜீசஸ் மேரி கான்வென்ட் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கும் இல்லமும் உள்ளது. இங்கு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் உள்ளே புகுந்து பள்ளியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது.

அதை தடுக்க வந்த 71 வயது கன்னியாஸ்திரியை அந்த கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு, ரூ.12 லட்சத்தையும் கொள்ளை அடித்து சென்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனர். பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் 4 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தன.

அதனை வைத்துக் கொண்டு போலீஸார் தேடுதல் வேட்டையை துவக்கினர். இந்நிலையில், முதன்மை குற்றவாளியாக கருதப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் நஸ்ருல் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நஸ்ருல் செல்டா ரயில் நிலையத்தில் நேற்றிரவு இறங்கியபோது அவரை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து சிஐ.டி. அதிகாரி சித்தரஞ்சன் கூறும்போது, "நஸ்ருல் கொல்கத்தா வருவதாக எங்களுக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது.

இதனையடுத்து செல்டா ரயில் நிலையத்தில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். நஸ்ருல் ரயிலில் இருந்து இறங்கிய அடுத்த நொடியே அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கடந்த மார்ச் மாதம் முதல் வங்கதேச எல்லைப் பகுதியில் தான் பதுங்கியிருந்ததாக நஸ்ருல் தெரிவித்தார். எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்து மீண்டும் அங்கிருந்து வேறு ஏதாவது பகுதிக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in