Last Updated : 17 Jun, 2015 10:54 AM

 

Published : 17 Jun 2015 10:54 AM
Last Updated : 17 Jun 2015 10:54 AM

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தைப் போல கர்நாடகத்தில் ‘இட்லி பாக்யா’ மலிவு விலை உணவகம்: திட்டக்குழு துணைத் தலைவர் தகவல்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மலிவு விலை ‘அம்மா உணவக'த்தைப் போல கர்நாடக மாநிலத்தில் ‘இட்லி பாக்யா' என்ற பேரில் மலிவு விலை உணவகங்களைத் தொடங்க இருப்பதாக அம்மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சி.எம்.இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளருமான‌ சி.எம்.இப்ரா ஹிம் சித்ரதுர்காவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் ‘அன்ன பாக்யா' திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல நடுத்தர, சிறுபான்மையின சமூக‌த்தைச் சேர்ந்த பெண்களின் திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கும் ‘ஷாதி பாக்யா' திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

இந்த வரிசையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகத்தைப்' போல மலிவு விலை உணவகங்களைத் தொடங்குவது தொடர்பாக சித்தராமையா ஆலோசித்து வருகிறார். இந்த திட்டம் தொடங்கப்பட்டால் ஏழை எளிய குடும்பத்தினர் மட்டுமில்லாமல் நடுத்தர வர்க்கத்தினரும் பயனடைவார்கள்.

எனவே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மலிவு விலை உணவ‌கங்களை உடனடியாக திறக்க வேண்டும் என திட்டக்குழு சார்பாக வலியுறுத்தியுள்ளேன். கர்நாட கத்தில் புதிதாக தொடங்கப்படும் இந்த திட்டத்துக்கு ‘இட்லி பாக்யா' அல்லது ‘சித்து பாக்யா' என பெயர் சூட்டலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளேன்.

நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த உணவகங்களில் முதல் கட்டமாக காலை, மாலையில் மட்டும் இட்லி விநியோகிக்கலாம். அதன் பிறகு படிப்படியாக இந்த திட்டத்தை விரிவுபடுத்தலாம்.

ஏழைகளின் பசியைப் போக்கிய ‘அன்ன பாக்யா' திட்டத்தை பாஜக குறை கூறுவதை ஏற்க முடியாது. ஏழை எளிய மக்களுக்காக கர்நாடக அரசு தீட்டும் திட்டங்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x