

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை எதிர்ப்பவர்கள் கண்களை தோண்டுவோம்; கைகளை வெட்டுவோம் என மம்தா பானர்ஜியின் உறவினர் ஒருவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், 24 வடக்கு பர்கானாஸ் பகுதியில் பிரச்சாரம் செய்த அபிஷேக், "திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது சிலர் உக்கிரமான பார்வையை பதிக்கிறார்கள். அவர்களது கண்கள் தோண்டப்பட்டு தெருக்களில் வீசப்படும். அதேபோல், சிலர் நம் கட்சிக்கு எதிராக கைகளை உயர்த்துகின்றனர் அவர்கள் கைகள் வெட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே இறுதியானது" எனப் பேசினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங், "திரிணமூல் தலைவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஜன் சக்கரபர்த்தி கூறும்போது, "அபிஷேக் பேச்சு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது" என்றார்.