

பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தில் உருவான 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பொது இடங்களில் எச்சில் துப்புவோர், சிறு நீ்ர் கழிப்போருக்கு தண்டனை விதிக்க வகை செய்கிறது.
மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டமியற்றல் பிரிவு, இதுதொடர்பான வரைவு சட்ட மசோதாவை தயாரித்து வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த மசோதாவை மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப மாற்றி சட்டமாக இயற்றி அதை நடைமுறைப்படுத்தலாம்.
முன்னதாக, இதுதொடர்பாக மத்திய அரசால் சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை நடைமுறைப்படுத்துவது சிரமம் என சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை கூறியதையடுத்து இந்த வரைவு சட்ட மசோதா தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, சுகாதாரம் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் மாநில அரசுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
எனவே, இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியாது. ஆனால் தூய்மை என்பது மாநில வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். எனவே, இதுதொடர்பாக வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதை மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டு செயல்படுத்தலாம்" என்றார்.
தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு சுய கட்டுப்பாடு மட்டும் போதாது என்றும் சட்டத்தின் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும் என்றும் அரசு கருதுகிறது.
விதிகளை மீறி பொது இடங்களில் எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல், சிறுநீர் கழித்தல் போன்ற செயலில் ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க வசதியாக, அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை, அபராதம் விதிப்பது மற்றும் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி, தூய்மை இந்தியா பிரச்சார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சுகாதாரத்துக்கும் பொதுமக்களின் உடல்நலனுக்கும் தொடர்பு உள்ளது என்பதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.