தெலங்கானா மேலவை தேர்தல் லஞ்ச விவகாரம்: சந்திரபாபு நாயுடுதான் முதல் குற்றவாளி - ஆளுநரிடம் ஜெகன் மோகன் ரெட்டி புகார்

தெலங்கானா மேலவை தேர்தல் லஞ்ச விவகாரம்: சந்திரபாபு நாயுடுதான் முதல் குற்றவாளி - ஆளுநரிடம் ஜெகன் மோகன் ரெட்டி புகார்
Updated on
1 min read

தெலங்கானா மேலவை தேர்தலில், தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுதான் முதல் குற்றவாளி என ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த மேலவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க ரூ.5 கோடி பேரம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுக்க முயன்றதாக அக்கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டியை தெலங்கானா மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். இவருடன் மேலும் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது செர்லோபல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் நரசிம்மனை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: அரசை நடத்து வதற்கு நிதி இல்லை என சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். ஆனால், தெலங்கானா மேலவைத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? கருப்பு பணத்தை லஞ்சமாக வழங்கும் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி, அடிக்கடி தனது ‘பாஸ்’ கூறியதாக அந்த வீடியோ காட்சிகளில் கூறுகிறார்.

அவரது ‘பாஸ்’ சந்திரபாபு நாயுடு என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். அப்படி இருக்கையில், ஏன் சந்திரபாபு நாயுடு மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய வில்லை? இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடுதான். அவர்தான் இந்த விவகாரத்தின் முதல் குற்றவாளி. ஆகவே சந்திரபாபு நாயுடுவையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி ஆளுநரிடம் புகார் அளித்தேன். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in