

ஸ்மார்ட் நகரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துக் கூறும்போது, வீடு வாங்குவோர் நலன்களை பாதுகாக்க புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
நாட்டில் நகர்ப்புற வளர்ச்சி குறித்த முழுமையான பார்வை இல்லை. நகர நிர்வாகிகளால் நகர விரிவாக்கத் திட்டங்கள் கையாளப்படாமல், கட்டுமான நிறுவனங்களால் கையாளப்படுகிறது என்பதை சூசகமாகச் சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, “நம் நாட்டில், தெரிந்தோ, தெரியாமலோ, கட்டுமான நிறுவனங்களின் மீதான மதிப்பு சரிவடைந்துள்ளது.
ஒரு ஏழை தனது சேமிப்பு அனைத்தையும் ஒரு வீடு வாங்குவதற்காக செலவிடுகிறார். அவர் ஏமாற்றப்படும் போது அனைத்தையும் இழந்து விடுகிறார். ஏழை மற்றும் சிறு நுகர்வோர்களைப் பாதுகாக்க மசோதா ஒன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளது, வரும் கூட்டத்தொடரில் அதனை நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஏழை மக்களின் வாழ்வில் வீடு ஒன்றை சொந்தமாக்கிக் கொள்வது என்பது திருப்புமுனை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் அரசின் முனைப்பு வீடு வழங்குவது மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ சிறந்த சுற்றுச்சூழலை வழங்குவதும் ஆகும்.
ஒரு நகரம் தனது எதிர்கால வளர்ச்சியை தானே தீர்மானித்துக் கொள்ளச் செய்வதே இந்த அரசின் நோக்கமாகும்” என்றார் நரேந்திர மோடி.