குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 7 சிங்கங்கள் பலி

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 7 சிங்கங்கள் பலி
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 சிங்கங்கள் உயிரிழந்தன. மேலும் 10 சிங்கங்களைக் காணவில்லை.

இதுகுறித்து, அம்ரேலி மாவட்ட துணை வன பாதுகாவலர் குஜ்ஜர் கூறும்போது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக, அம்ரேலி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ககதியோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் லிலியா வனப்பகுதியில் பாய்ந்தோடியதில் 3 மாத சிங்கக்குட்டி உட்பட 3 சிங்கங்கள் இறந்தன” என்றார்.

பாவ்நகர் மாவட்ட துணை வன பாதுகாவலர் ஜி.எஸ்.சிங் கூறும்போது, “ஷெத்ருஞ்சி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 சிங்கங்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிங்கங்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்றார்.

மேலும் 10 சிங்கங்களைக் காணவில்லை. அவற்றை வனக் காவலர்கள் தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக 35 பேர் அடங்கிய 7 குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கனமழை காரணமாக புள்ளி மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றிகள் ஆகியவையும் உயிரிழந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in