Published : 20 May 2014 06:39 PM
Last Updated : 20 May 2014 06:39 PM

டெல்லி முதல்வராக நியமிக்க மனு செய்த நபர்: நொந்துபோன உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி முதல்வராக தனக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று மகராஜ் என்பவர் விசித்திர பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, நீதிபதிகள் அதனைக் கண்டனங்களுடன் தள்ளுபடி செய்துள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர் தன்னை ஆதரிப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்ததையடுத்து நொந்து போன நீதிபதி சவான், "அடுத்த முறை எங்களுக்காக பிரார்த்தியுங்கள், எங்கள் நிலமையைப் பற்றி ஒருவரும் கவலைப்படுவதில்லை" என்று நகைச்சுவையுடன் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இந்த விசித்திர மனுவை பி.எஸ். சவான், மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரித்துத் தள்ளுபடி செய்தனர்.

மனுதாரர் என்ன எம்.எல்.ஏ-யா? அல்லது எம்.பி.-யா? என்ன அடிப்படையில் அவர் தன்னை முதல்வராக நியமிக்கவேண்டும் என்கிறார் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபின் மஜும்தார், எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யாக இல்லாத ஒருவர் இதற்கு முன்னால் முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகித்துள்ள சந்தர்ப்பங்களைச் சுட்டிக்காட்டினார்.

மனுதாரார் மகராஜ், ஆளுனர் நஜீப் ஜங் தன்னை டெல்லி முதல்வர் பதவி ஏற்க அழைத்தாகவேண்டும் என்று தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலகல் நாட்டிற்கு ஏகப்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஜனநாயக நடைமுறையை சேதப்படுத்தி விட்டதாகவும் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்காதது தனது அடிப்படை உரிமையை கடுமையாக மீறும் செயல் என்றும் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசித்திர மனுவைத் தள்ளுபடி செய்தபோதுதான் நீதிபதி "அடுத்த முறை எங்களுக்காக பிரார்த்தியுங்கள், எங்கள் நிலைமையைப் பற்றி ஒருவரும் கவலைப்படுவதில்லை" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x