

நிலப் பட்டா புத்தகத்தில் பெயர் மாற்றுவதற்கு தாசில்தார் லஞ்சம் கேட்டதால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி மாரடைப்பால் மரணமடைந்தார். இது தொடர்பாக தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், நாகிரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சையது முக்தல் பாஷா (60). இவருக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான பட்டா புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்யக் கோரி நந்தலூர் தாசில்தார் அலுவலகத்தை அணுகி உள்ளார். அப்போது லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றப்படும் என தாசில்தார் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பாஷா, நேற்று காலையில் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஒரு செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் போலீஸாரும் டவர் மீது ஏறி முதியவரைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் பதற்றத்தில் முதியவர் பாஷாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டவர் மீதே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலத்தை கீழே இறக்கிய போலீஸார், நந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நந்தலூர் கோட்டாட்சியர் விசாரணை செய்து ஆட்சியருக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் நந்தலூர் தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.