Published : 15 Mar 2014 05:38 PM
Last Updated : 15 Mar 2014 05:38 PM

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: சந்திரசேகர ராவ் திட்டவட்ட அறிவிப்பு

எந்த தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடம் இல்லை என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) தலைவர் சந்திரசேகர் ராவ் சனிக்கிழமை திட்டவட்டமாக அறிவித்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்துடன் கூடிய தெலங்கானா மாநிலத்தை வழங்கினால், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை காங்கிரஸூடன் இணைப்பேன் என அக் கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார். தற்போது, அவர் நினைத்தது போன்றே மாநில பிரிவினை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் வழங்கியதால், தெலங்கானா பகுதியில் டி.ஆர்.எஸ். கட்சியை தன்னுடன் இணைத்து தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் நினைத்தது. ஆனால், நினைத்தது ஒன்று, நடப்பது வேறாக உள்ளதால் தெலங்கானா மாவட்டங்களில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை ஹைதராபாத்தில் டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சி, கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானா போராட்டத்தை வேடிக்கை பார்த்தது. இதனால் மாணவர்கள் உள்பட சுமார் 600 பேர் உயிர் தியாகம் செய்ய வேண்டி வந்தது. தெலங்கானா நீரை சீமாந்திராவுக்கு கொண்டு செல்ல வழி வகுத்தவர் தற்போதைய தெலங்கானா காங்கிரஸ் கட்சி தலைவர் பொன்னாலா லட்சுமையா. கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்களை சீமாந்திராவில் சேர்த்துவிட்டனர். எனது கட்சி எம்.எல்.ஏ. க்களை இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

மாணவர்கள் உயிர் தியாகம் செய்யும் போது, அதனை தடுக்கவே தெலங்கானா மாநிலம் வழங்கினால், டி. ஆர். எஸ் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைப்பதாக கூறினேன். தற்போது எனது கட்சிக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்து வருகிறது. இனி காங்கிரஸ் கட்சியுடன் சேருவதோ, கூட்டணி என்கிற பேச்சுக்கோ இடம் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி இருக்கலாம். ஒரு வாரத்துக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x