

மேகி நூடுல்ஸ் சர்ச்சையை அடுத்து வேறு பல நூடுல்ஸ்கள், பாஸ்தா மற்றும் மக்ரோனி போன்ற உணவு பொருட்களையும் ஆய்வு செய்ய மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தில் மேகி நூடுல்ஸில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோனோ சோடியம் குளுடோமேட் (எம்எஸ்ஜி) மற்றும் காரீயம் (லெட்) அதிகளவு இருப்ப தாக புகார் எழுந்தது. இதையடுத்து பல மாநிலங்களில் மேகி உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேறு 7 நிறுவனங்கள் தயாரிக்கும் நூடுல்ஸ்கள், பாஸ்தா, டாப் ரேமென், புடுல்ஸ், வெய் வெய் உட்பட மக்ரோனி உணவு பொருட்களையும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து எப்எஸ்எஸ்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ஒய்.எஸ்.மாலிக், அனைத்து மாநிலங்களிலம் உள்ள உணவு பாதுகாப்பு துறை ஆணையர்களுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில், “மேகி நூடுல்ஸ் மற்றும் வேறு சில உணவு பொருட்களை ஆய்வு செய்ததில் மக்களின் உடல்நலம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இதேபோன்ற உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று மாலிக் அறிவுறுத்தி உள்ளார்.
நெஸ்லே இண்டியா, ஐடிசி, இண்டோ நிஸான் புட் லிமிடெட், ஜிஎஸ்கே கன்சியூமர் ஹெல்த்கேர், சிஜி புட்ஸ் இண்டியா, ருச்சி இன்டர்நேஷனல் மற்றும் ஏஏ நியுட்ரீஷியன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்களை எப்எஸ்எஸ்ஐ பட்டியலிட்டு அவற்றை ஆய்வு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிஜி புட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.பி.சாக் கூறுகையில், “எங்கள் நிறுவன தயாரிப்புகள், உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றிதான் தயாரிக்கப்படுகின்றன. அதிகாரி கள் விசாரணைக்கு எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கும்’’ என்றார். மற்ற நிறுவனங் களிடம் இருந்து உடனடியாக பதில் பெற முடியவில்லை.