

முகமது நபிகள் வாழ்க்கை வரலாற்றால் ஈர்க்கப்பட்ட இந்து மார்வாரி ஒருவர், அவரைப் பற்றி புத்தகம் எழுதி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனுவில் உள்ள கொலாசியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் சர்மா. கடந்த 1987-ம் ஆண்டு பிறந்தவர். இவர் 9-ம் வகுப்பு படிக்கும்போதே, தனது கிராமத்தில் ஒரு நூலகத்தைத் தொடங்கினார். ‘காவோன் கா குருக்குல்’ என்ற பெயரில் ஆரம்பித்த அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்களை சர்மாவும் படிக்கத் தொடங்கினார். புதிய புத்தகங்களை நூலகத்துக்காக வாங்கும்போது, அதைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார்.
அந்தப் பழக்கத்தால் முகமது நபிகள் பற்றிய புத்தகத்தை ஒரு முறை படித்துள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாற்றால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார் சர்மா. நூலகத்தில் உள்ள எத்தனையோ புத்தகங்களை அவர் படித்திருந்தாலும், முகமது நபியைப் பற்றிய அந்தப் புத்தகம், ராஜீவ் மனதில் ஏதோ மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற உணர்வு ராஜீவ் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ‘பைகாம்பர் ரோ பைகாம்’ என்ற பெயரில் முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை மார்வாரி மொழியில் ராஜீவ் சர்மா எழுதியுள்ளார்.