

16-வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 4-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை காலை ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டத்தொடரின் முதல் இரு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பர். இதை காங்கிரஸின் மூத்த உறுப்பினரான கமல்நாத் தற்காலிக மக்களவைத் தலைவராக இருந்து நடத்தி வைப்பார். கமல்நாத்துக்கு பிஜு ஜனதா தளத்தின் அர்ஜுன்சரண் சேத்தி, தேசிய மக்கள் கட்சியின் பி.ஏ.சங்மா மற்றும் காங்கிரஸின் பிரன்சிங் எங்டி ஆகியோர் உதவி புரிவர்.
16-வது மக்களவையின் தலைவர் வரும் 6-ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஜூன் 9-ல் இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். அதன்பிறகு தனித்தனியாக நடக்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடத்தப்படும். இதற்கு பதில் அளித்து, மே 10 மற்றும் 11-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்.
எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு?
இந்தமுறை 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் எதிர்க்கட்சியாக அங்கம் வகிக்க தேவையான பத்து சதவீதமான 55 உறுப்பினர்கள் எண்ணிக்கை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவது யார் என்ற புதிர் நீடிக்கிறது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இது தொடர்பாகக் கூறியதாவது: யார் எதிர்க்கட்சி என்பது தொடர்பாக பல்வேறு அவை நடவடிக்கை குறிப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதுபற்றி முடிவு எடுக்க இன்னும் அவகாசம் உள்ளது.
காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களைக் கொண்ட அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை கூட்டாக இணைந்து வந்தால் எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படுவார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப் படவில்லை. இதுவரை ஆளும் அரசுக்காகத்தான் கூட்டணிகள் அமைப்பது வழக்கமாக இருந்துள்ளது. எதிர்க்கட்சிக்காக கூட்டணி அமைக்கும் வழக்கம் இருந்தது இல்லை. இது குறித்து விதிமுறைகள் என்ன சொல்கின்றன எனப் பார்க்க வேண்டும்.
பதவி ஏற்புக்காக மட்டும் நடத்தப்படும் சிறிய கூட்டத் தொடரான இதில் எந்தவிதமாக சட்ட மசோதாக்களும் விவாதத் திற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தற்போது உள்ள நிலையில் எதிர்க்கட்சியாக யாரை நியமனம் செய்வது என்பது சபாநாயகரின் முடிவாக இருக்கும். இது பற்றி ‘தி இந்து’விடம் பாஜக வட்டாரம் கூறுகையில், காங்கிரஸையே எதிர்க்கட்சியாக நியமிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெருந்தன்மையாக திட்டமிட்டு இருப்பதாகவும், மற்ற கட்சிகளை நியமித்தால் புதிய பிரச்சினைகள் ஏற்படும் எனக் கருதுவதாகவும் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது குறித்த புதிய அமைச்சரவையின் முடிவு குடியரசு தலைவருக்கு பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த பின் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு நாடாளுமன்ற பொதுச் செயலருக்கு பிரணாப் முகர்ஜி உத்தரவிடுவார். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.