Last Updated : 25 Jun, 2015 08:22 AM

 

Published : 25 Jun 2015 08:22 AM
Last Updated : 25 Jun 2015 08:22 AM

மகாராஷ்டிர மாநில பெண் அமைச்சர் பங்கஜா முண்டே மீது ரூ.206 கோடி ஊழல் புகார்

மகாராஷ்டிர மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சரும் மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேயின் மகளுமான பங்கஜா முண்டே ரூ.206 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்காக புத்தகம், உணவுப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கு வதற்கான ஒப்பந்தத்துக்கு டெண்டர் கோராமல் ஒரே நாளில் 24 அரசு தீர்மானங்கள் மூலம் பங்கஜா அனுமதி அளித்துள்ளார். ரூ.206 கோடி மதிப்பிலான இந்த கொள் முதலில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 8 மாதங்களே ஆன நிலையில், இது மிகப்பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

அகமதுநகர் மாவட்ட தலைவர் மஞ்சு குந்த் என்பவர் அமைச்சர் பங்கஜாவின் அலுவலகத்துக்கு கடந்த ஜூன் 15-ம் தேதி ஒரு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருளில் (சிக்கி) களிமண் கலந்து இருந்ததாகக் கூறியிருந்தார். அவரது புகார் கடிதமே இந்த ஊழல் வெளியாக காரணமாக அமைந்தது.

விதிமுறைகளின்படி, ரூ.3 லட்சத்துக்கும் மேல் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றாலும் இணையதளம் மூலம் டெண்டர் கோர வேண்டும். இதை அமைச்சர் பங்கஜா பின்பற்றாமல், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி 24 அரசு தீர்மானங்கள் மூலம் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து கேட்க முயன்றபோது பங்கஜாவை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் ஜூன் 28-ம் தேதி நாடு திரும்புவார் என்றும் அவரது துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x