கன மழை எதிரொலி: பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் ரத்து

கன மழை எதிரொலி: பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் ரத்து
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பயணம் கனமழை காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து வாரணாசிக்கு நேற்று மாலை 3.15 மணிக்கு சென்றடைவதாக இருந்தது. பிரதமர் தனது வாரணாசி தொகுதிக்கும் உ.பி.யின் பிற பகுதிகளுக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மாலை 5.50 மணிக்கு அவர் டெல்லி புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

பிரதமர் தனது 3 மணி நேர வாரணாசி பயணத்தில் இத்தொகுதிக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை பரிசளிக்க இருந்தார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், 345 படுக்கைகள் கொண்ட, விபத்து காயங்களுக்கான நவீன சிகிச்சை பிரிவை பிரதமர் தொடங்கி வைக்க இருந்தார்.

இதையடுத்து வாரணாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவிருந்தார். இந்நகருக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் ரூ.574 கோடியில் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டு திட்டம், சுற்றுச் சாலை அமைக்கும் திட்டம், பவத்பூர் விமான நிலையம் முதல் வாரணாசி வரையிலான சாலையை அகலப்படுத்தும் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைக்க இருந்தார்.

இந்நிலையில் கிழக்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதில் வாரணாசியில் பிரதமர் பேசவிருந்த பொதுக்கூட்ட மைதானம், ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.

மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல், வாரணாசி மாவட்ட அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பிரதமர் பயணம் செய்யும் இடங்களை நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து பிரதமரின் பயணத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in