Published : 21 May 2014 10:51 AM
Last Updated : 21 May 2014 10:51 AM

மோடி தலைமையில் இந்தியா வல்லரசுப் பட்டியலில் இடம்பெறும்: சந்திரபாபு நாயுடு புகழாரம்

நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலக வல்லரசுகளில் இந்தியா இடம்பெறும் என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார்.

தேசிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: தே.ஜ.மு. மற்றும் பாஜகவின் வெற்றியை இந்த நாட்டின் ஒவ் வொரு குடிமகனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் வந்த மோடி, திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்த அதே நாளில் ஐந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார். அதை முடித்து தேநீர் அருந்தலாமா என்றார். நான் உணவு அருந்தலாமே என்றதற்கு பணி முடிந்ததும் தான் உணவு எடுத்துக் கொள்வேன் என உறுதியாகக் கூறி விட்டார். அந்த அளவிற்கு தன் கடமையில் மோடி உறுதியாக இருந்தார்.

அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா இருக்க வேண்டும். சில வளரும் நாடுகள் இருக்கலாம். ஆனால், நமக்கு உண்மையான போட்டி அமெரிக்காவும், சீனாவும்தான். நரேந்திர மோடி நிச்சயமாக அதை செய்து முடிப்பார். தேசத்தைக் கட்டமைக்கும் இந்தப் பணியில் நரேந்திர மோடியுடன் நாங்களும் பங்கேற்கிறோம்.

இந்த நாட்டை தூய்மைப் படுத்துவதற்கும், வளர்ச்சி அடையச் செய்வதற்கும் மோடிக்கு முழுமையான ஒத்துழைப்பை தெலுங்குதேசம் கட்சி அளிக்கும். நான் பல தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் மோடியின் மனஉறுதியும், உற்சாகமும் அசாதாரணமானவை. மக்கள் காங்கிரஸின் ஊழல், திறமையின்மை, செயல்படாத தன்மை ஆகியவற்றால் வெறுத்துவிட்டனர். மோடியின் தலைமையில் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர் மீண்டும் மீண்டும் பிரதமராக வருவார். அதுதான் நாட்டின் விருப்பமாகும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x