

சென்னையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தேசிய புலனாய்வு நிறுவனத்தின் (என்.ஐ.ஏ.) விசாரணையை உதறிய தமிழகம் மீது உள்துறை அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளது.
தீவிரவாத விசாரணையில் முதன்முறையாக ஒரு மாநில அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தவறான உதாரணத்திற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. குழு சென்னை புறப்படத் தயாராக இருந்தது. அதேநேரம் ஹைதராபாதில் இருந்தும் மத்திய தடயவியல் நிபுணர்கள் சென்னை செல்லத் தயாராக இருந்தனர்.
அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மாநில அரசின் தொடர்புடையதால் தமிழக அரசே விசாரிக்கும் எனவும் இந்த வெடிகுண்டு விசாரணையில் என்.ஐ.ஏ.வின் உதவி தேவை இல்லை எனவும் தமிழக அரசிடம் இருந்து டெல்லிக்கு வந்த தகவல் இரு குழுக்களின் பயணத்தையும் ரத்து செய்ய வைத்தது. கேரளாவில் இருந்து கிளம்பி சென்னை வந்த என்.ஐ.ஏ.வின் குழுவும் பணியில் இறங்கவில்லை.
இது குறித்து டெல்லியின் உள்துறை அமைச்சகத்தில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அதன் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இதில் தமிழக அரசின் செயல் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் எனவும் இதுவரை தீவிரவாத தாக்குதல்களில் எந்த மாநிலமும் இதுபோல் சொன்னதில்லை எனவும் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தமிழக அரசின் முடிவை ஏற்க வேண்டி உள்ளது என அமைச்சர் கூறி விட்டார். தமிழக அரசு கேட்கும் உதவிகளை மட்டும் செய்யும்படியும் தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சரின் முடிவு மிகவும் தவறானது’ எனக் கருத்து கூறுகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதலின் தடயங்களை சேகரிப்பது தேசிய தடவியல் மையத்தின் பணி என்பதை தமிழக அரசிடம் எடுத்துக் கூறியதாகவும், இது ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை தனது பணியை தொடங்கியதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எதிராகப் பேசுவது புதிதல்ல எனவும் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு தேசிய தீவிரவாத தாக்குதல் எதிர்ப்பு மையம் (என்.சி.டி.சி) தொடங்க முயன்றபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் இணைந்து ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார் எனவும் அவர்கள் நினைவு கூருகின்றனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய டெல்லியின் அரசியல் வட்டாரம் கூறியதாவது: ‘இந்த தாக்குதல் சாதாரண சமயத்தில் நடந்து இருந்தால் தமிழக அரசின் விருப்பத்திற்கு மத்திய அரசு அனுமதித்திருக்காது. இது தேர்தல் நேரம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதே காரணத்திற்காகத்தான் மற்ற கட்சிகளும் இதில் கருத்து சொல்லாமல் அமைதி காக்கின்றன.
மும்பையில் செப்டம்பர் 2011-ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் நாடு முழுவதிலும் நடைபெறும் சம்பவங்களை விசாரிக்க என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது. மேலும் பல்வேறு பாதுகாப்பு விஷயங்களுக்காக மத்திய அரசு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்துள்ளது’ எனத் தெரிவித்தது.
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பை தமிழக அரசு தானே விசாரிப்பதாக அறிவித்துள்ளதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார் என்று அரசியல் வட்டாரம் கூறுகிறது.